Popular Posts

Tuesday, July 21, 2009

அன்பாவின் உலகம்

இந்த ப்ளோக்கை எப்பொழுதோ துவங்க வேண்டுமென்று நினைத்திருந்தேன் ... ஆனால் இயலவில்லை. இன்றுதான் ஒரு விழிப்புணர்வே ஏற்பட்டது. பலமுறை முயன்று தோற்றேன். ஆயினும் முயற்சி வீண் போகவில்லை. தோல்விகள் நிலையல்ல என்பது எத்தனை நிதர்சனமான உண்மை...
புலம் பெயர்ந்த தமிழர்களில் நானும் ஒருவன். என்னுடைய இப்பயணம் வெளிநாட்டு மோகத்தால் ஏற்பட்டதல்ல. என் பெற்றோர்தான் எனக்கு முன்னுதாரணம். ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் மிகக் குறைவான கல்வியறிவோடு இந்திய மண்ணை விட்டு மலேசிய மண்ணில் காலடி பதித்து எட்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்து அளவான வாழ்கை வாழ்ந்து எங்களையும் வளமாக வாழ வைத்தனர். அவர்களுடைய திரைகடல் ஓடி திரவியம் தேடும் பாடமே என் புலம் பெயரும் நோக்கத்திற்கு முதல் வித்திட்டது. நானும் கடல் தாண்டி திரவியம் தேடிக்கொண்டிருக்கிறேன், ஆஸ்திரேலியா எனும் கண்டத்தில்...இன்றோடு ஓராண்டைத் தாண்டி மூன்று மாதங்கள் ஓடி விட்டன... பெரும் வெற்றியில்லை எனிலும் நிறைவான வாழ்க்கை வாழ்கிறேன், என் இனிய குடும்பத்தோடு... எங்களின் மாபெரும் ஏக்கமும் கவலையும் ஒன்றே ஒன்றுதான்..அது என்னவென்றால் பிரிவாற்றாமை... அளவற்ற அன்பை ஒரு சிறு குறை காண வண்ணம் பொழிந்த எம்பெற்றோர் , தம்பியின் வாழ்கையில் ஆங்காங்கே ஒளிச்சுடர் ஏற்றி தன்னொளி இழந்த உடன்பிறந்தோர், நெடும் பயணத்தில், தோல்வியால் துவள்கின்ற நேரத்தில் மாசற்ற அன்புடன் கைக் கொடுத்த தோழர்கள் , என் ஆசிரியப் பணியில் உயிராய் நான் நேசித்த எனை நேசித்த இன்றும் நேசிக்கும் என் மாணவர்கள்.... தினம் தினம் நினைத்துப் பார்க்கிறேன்... மலர்கிறேன்...மகிழ்கிறேன்...மலைக்கிறேன் ...ஆயினும் பிரிவால் வருத்துகிறேன்...
இதோ இந்த பிரிவிற்கு ஒரு முற்றுப்புள்ளி... இந்த வலைப்பதிவு.. என் வலைப்பதிவு.. இயற்கை ஏற்படுத்தியிருக்கும் இந்த இடைவெளியை, இன்றோடு இடைவிடாத இணையத்தொடர்பை ஏற்படுத்தி மூடி விடுகிறேன்...

என் இணையத் தோழர்களே ... நீங்கள்தான் எனக்கு கை கொடுக்க வேண்டும்..

என்றும் அன்புடன்,
அன்பா.

No comments: