Popular Posts

Wednesday, July 22, 2009

பேனாவின் பலம

நான் சின்ன வயசாயிருக்கும்போது எனக்கு எழுத ரொம்ப ஆசை. அப்பொழுதெல்லாம் எழுத்தாளர்களைப் பர்த்தலாலே ஒருவித பரவசம் ஏற்படும். அவர்கள் மீது மரியாதை, ஒருவித பயமா இல்ல பணிவா என்று சொல்லத்தெரியவில்லை. சில சமயங்களில் ஆங்காங்கே நடக்கும் எழுத்தாளர் கருத்தரங்குகளில் அவர்களுடைய வாய்மை, தன் கருத்துகளை ஆணித்தரமாக முன்வைக்கும் பாங்கு, சிந்தனை திறன், இடைஇடையே ஊறுகாய் போல சிந்திக்க வைக்கும் நகைச்சுவை துளிகள், சொல்லாடலுக்கிடையே உதிர்க்கும் புன்னகை, கனிந்த பார்வை, இவையெல்லாம் நான் அவர்களைப் பார்த்துப் பிரமித்த விஷயங்கள். இத்தனையும் நான் இவர்களுடையே எழுத்துப் படிவங்களில் கண்டபோது இவர்களில் ஒருசிலரை நான் நேசிக்கவே (ஏறக்குறைய ஆண்டாள் மாதிரி)ஆரம்பித்து விட்டேன் (யார் என்பது வேண்டாமே!). அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய எழுத்துகள் அல்லது எழுத்துப் படிவங்கள் போல இன்று, இன்றைய எழுத்து படிவங்கள் மக்களை தாக்குகின்றதா? அல்லது எழுத்தையோ எழுத்தாளனையோ காதலிக்க தூண்டுகின்றதா?
அன்பர்களே! நான் இதனை மலேசிய மக்களை மட்டுமே கேட்கின்றேன்? இதற்கான விடையை யாமறியோம் பராபரமே!
சரி ! நான் சொல்ல வந்த விஷயத்திற்கு வருவோம்! பேனாவிற்கு இன்னும் பலம் இருக்கிறதா? அதாவது மலேசிய மண்ணில்? ஏன் இல்லை? தமிழ் நாளிதழ்கள் தோன்றிய காலம்தொட்டே இந்த நாட்டிலே எத்தனை எத்தனையோ மாற்றங்களை எங்கள் பேனாக்கள் கொண்டு வந்திருக்கின்றன...அப்படின்னு நீங்க சொல்றது கேட்கிறது சார்..ஆனால் நான் சரித்திரத்தைக் கேட்கவில்லை? இப்ப? இப்பவென்றால் ஒரு இருபத்து வருஷ கால கட்டத்திலே? ஏதாவது அரசியல் மாற்றங்கள்?
" மக்கள் பணத்தை ஏப்பம் விட்ட 'மாங்கொட்டை தலையனின்' தலைவன் பதவி காலி! "மக்கள் ஏடு" துணிகரம் அப்படின்னு எதாவது?
நிர்வாண படமெடுத்து பல பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த விஜயனின் அரஜாகம் அம்பலம் ! "மலேசிய தோழன்" சாகசம்! அப்படின்னு எதாவது?
மக்களால் தூக்கி எறியப்பட்ட ம.த. கா. தலைவர் தமிழ் நாளிதழ்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் தலைவணங்கி பதவி விலகினார்... அப்படின்னு எதாவது ?
இல்லையே? ஏன்? ஒரு அரசியல் தலைவன் எத்தனையோ அரஜாகம் பண்ணாலும், பட்டப் பகல் கொள்ளை அடித்தாலும், ஏன் கொலை கூட பண்ணாலும், எந்த எழுத்தாலும் அசைக்க முடியலையே? ஏன்? அதான் சார்! நான் சொல்றேன் ....உங்கள் பேனாக்களுக்கு பலம போயிடுத்து.... அல்லது உங்கள் பலத்தை புடுங்கிட்டனுங்கோ! உங்களுடையே எழுத்து சுதந்திரம்அம்பேல் ஆகிவிட்டது...
ஏன் ஐயா இந்த அவல நிலை?
நீதி கேட்டு வீதி போனான் எங்கள் வீர தமிழன் ஒருவன்!
கோடி மக்கள் கூடி சேர்ந்து நடந்தோம் அமைதி ஊர்வலமாக...
விளைவு ... தடியடி, கண் எரிச்சல், கைது, அவமானம், வேலை போச்சு ...எங்களுக்கு!
விசாரணையே இல்லாம ரெண்டு வருசத்துக்கு மேல சிறைவாசம் எங்கள் வீரனுக்கு...வாழ்கையே நாசம் பண்ணிட்டனுங்க!
இதெல்லாம் எழுதி கேட்க முடியாத வெட்கக்கேடான நிலையில் மலேசிய தமிழ் ஏடுகள் உள்ளன என்பது எத்துனை கேவலம்?

Tuesday, July 21, 2009

அன்பாவின் உலகம்

இந்த ப்ளோக்கை எப்பொழுதோ துவங்க வேண்டுமென்று நினைத்திருந்தேன் ... ஆனால் இயலவில்லை. இன்றுதான் ஒரு விழிப்புணர்வே ஏற்பட்டது. பலமுறை முயன்று தோற்றேன். ஆயினும் முயற்சி வீண் போகவில்லை. தோல்விகள் நிலையல்ல என்பது எத்தனை நிதர்சனமான உண்மை...
புலம் பெயர்ந்த தமிழர்களில் நானும் ஒருவன். என்னுடைய இப்பயணம் வெளிநாட்டு மோகத்தால் ஏற்பட்டதல்ல. என் பெற்றோர்தான் எனக்கு முன்னுதாரணம். ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் மிகக் குறைவான கல்வியறிவோடு இந்திய மண்ணை விட்டு மலேசிய மண்ணில் காலடி பதித்து எட்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்து அளவான வாழ்கை வாழ்ந்து எங்களையும் வளமாக வாழ வைத்தனர். அவர்களுடைய திரைகடல் ஓடி திரவியம் தேடும் பாடமே என் புலம் பெயரும் நோக்கத்திற்கு முதல் வித்திட்டது. நானும் கடல் தாண்டி திரவியம் தேடிக்கொண்டிருக்கிறேன், ஆஸ்திரேலியா எனும் கண்டத்தில்...இன்றோடு ஓராண்டைத் தாண்டி மூன்று மாதங்கள் ஓடி விட்டன... பெரும் வெற்றியில்லை எனிலும் நிறைவான வாழ்க்கை வாழ்கிறேன், என் இனிய குடும்பத்தோடு... எங்களின் மாபெரும் ஏக்கமும் கவலையும் ஒன்றே ஒன்றுதான்..அது என்னவென்றால் பிரிவாற்றாமை... அளவற்ற அன்பை ஒரு சிறு குறை காண வண்ணம் பொழிந்த எம்பெற்றோர் , தம்பியின் வாழ்கையில் ஆங்காங்கே ஒளிச்சுடர் ஏற்றி தன்னொளி இழந்த உடன்பிறந்தோர், நெடும் பயணத்தில், தோல்வியால் துவள்கின்ற நேரத்தில் மாசற்ற அன்புடன் கைக் கொடுத்த தோழர்கள் , என் ஆசிரியப் பணியில் உயிராய் நான் நேசித்த எனை நேசித்த இன்றும் நேசிக்கும் என் மாணவர்கள்.... தினம் தினம் நினைத்துப் பார்க்கிறேன்... மலர்கிறேன்...மகிழ்கிறேன்...மலைக்கிறேன் ...ஆயினும் பிரிவால் வருத்துகிறேன்...
இதோ இந்த பிரிவிற்கு ஒரு முற்றுப்புள்ளி... இந்த வலைப்பதிவு.. என் வலைப்பதிவு.. இயற்கை ஏற்படுத்தியிருக்கும் இந்த இடைவெளியை, இன்றோடு இடைவிடாத இணையத்தொடர்பை ஏற்படுத்தி மூடி விடுகிறேன்...

என் இணையத் தோழர்களே ... நீங்கள்தான் எனக்கு கை கொடுக்க வேண்டும்..

என்றும் அன்புடன்,
அன்பா.